விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முடிவு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் நலனுக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே கடந்த ஆண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில், எனது கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் எனவும், இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அப்போதைய மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங் மற்றும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உறுதிமொழி அளித்தனர். இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி எனது உண்ணாவிரதத்தை முடித்தேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் மத்திய அரசு அளித்த உறுதிமொழிப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அன்னா ஹசாரே, இதற்கான தேதி மற்றும் இடம் குறித்து விரைவில் அறிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.