அண்ணா பல்கலை.,க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை; மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு

உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அதன் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். துணைவேந்தரின் இந்த முடிவு மற்றும் தன்னிச்சையாக செயல்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் தமிழக அரசால் அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் தங்கமணியை ஆகியோரை கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. துணை வேந்தர் சூரப்பா கூறியது போன்று அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.