என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

2019 ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 வளாக கல்லூரிகள் மற்றும் 518 இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 வளாக கல்லூரிகள் 71 முதல் 74 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.

அதேபோல், இணைப்பு கல்லூரிகளான 518 கல்லூரிகளில் 38 கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவை ஆகும். அதில் 95 மற்றும் 90 சதவீத தேர்ச்சிக்கு மேல் தலா ஒரு கல்லூரியும், 80 சதவீதத்துக்கு மேல் 18 கல்லூரிகளும், 70 சதவீதத்துக்கு மேல் 41 கல்லூரிகளும், 60 சதவீதத்துக்கு மேல் 33 கல்லூரிகளும், 50 சதவீதத்துக்கு மேல் 44 கல்லூரிகளும், 40 சதவீதத்துக்கு மேல் 78 கல்லூரிகளும், 30 சதவீதத்துக்கு மேல் 89 கல்லூரிகளும், 20 சதவீதத்துக்கு மேல் 105 கல்லூரிகளும், 10 சதவீதத்துக்கு மேல் 70 கல்லூரிகளும், ஒற்றை இலக்க (1 முதல் 10 சதவீதம்) சதவீதத்துடன் 36 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்று இருக்கின்றன. இதுதவிர 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

இதேபோல், 2019 ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வை அண்ணா பல்கலைக்கழக 3 வளாக கல்லூரிகள், 498 இணைப்பு கல்லூரிகள், தன்னாட்சி பெற்ற 55 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அவற்றில் வளாக கல்லூரிகள் 69 முதல் 75 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றன.

இணைப்பு கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கு மேல் 2 கல்லூரிகளும், 80 சதவீதத்துக்கு மேல் 14 கல்லூரிகள், 70 சதவீதத்துக்கு மேல் 28 கல்லூரிகளும், 60 சதவீதத்துக்கு மேல் 30 கல்லூரிகளும், 50 சதவீதத்துக்கு மேல் 37 கல்லூரிகளும், 40 சதவீதத்துக்கு மேல் 45 கல்லூரிகளும், 30 சதவீதத்துக்கு மேல் 77 கல்லூரிகளும், 20 சதவீதத்துக்கு மேல் 97 கல்லூரிகளும், 10 சதவீதத்துக்கு மேல் 87 கல்லூரிகளும், ஒற்றை இலக்க (1 முதல் 10 சதவீதம்) சதவீதத்துடன் 170 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்று இருக்கின்றன. இதுதவிர நவம்பர் மாத தேர்வுகளில் மட்டும் 11 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://aucoe.annauniv.edu/passpercentndrnkdetails.html என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கல்லூரிகள் பெற்ற தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.