அகமதாபாத்தில் கடல் விமானம் இயக்கப்படும் என அறிவிப்பு

கடல் விமானம் இயக்கம்... அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை வரை தினமும் இரண்டு முறை கடல் விமானம் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஸ்பைஸ்ஜெட் ஏற்றுள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் இதற்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் www.spiceshuttle.com என்ற இணையதள பக்கத்தில் வரும் 30ம் தேதி முதல் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். விமானத்தின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த விமான சேவை வரும் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கடல் விமானம் பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் போக்குவரத்தை மேலும் எளிதாக்குவதற்கு உதவும் என கூறுகின்றனர். நாட்டின் முதல் கடல் விமானம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் இருந்து இந்தியா வந்திறங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.