இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு

பென்னாகரம்: கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. எனவே இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் நிரம்பியது.

இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. அதன்படி இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக உயரந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்ந்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது மீண்டும் தொடர்ந்து நீடிக்கிறது.