வைத்திய பற்றாக்குறையை நீக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

கவனயீர்ப்பு போராட்டம்...முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம் பெறுகின்றது. தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

பல்வேறு வகையிலும் பின்தங்கி காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலை சீராக இயங்காததால் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படாததன் பின்னணியில் குறித்த போராட்டமானது இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன், ஆண்டிஜயா புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறித்த போராட்ட இடத்தில் முள்ளியவளை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.