கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வந்தது.

ஆனால் கடந்த ஜூலை மாத இறுதியில் வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அந்த நகரத்துக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அங்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா இல்லை என உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. எனவே நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.