பாம்பாறு அணை 4வது மதகு உடைந்தது... வெள்ள அபாய எச்சரிக்கை

ஊத்தங்கரை: வெள்ள அபாய எச்சரிக்கை... ஊத்தங்கரை பாம்பாறு அணையின் 4-வது மதகு உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை ஐந்து மதகுகளுடன் கடந்த 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தொடர்மழையின் காரணமாக நான்கு முறை அதன் முழு கொள்ளளவான 19.6 அடியை எட்டியது. அதை தொடந்து அணைக்கு வரும் சுமார் 5000 கனஅடி நீர் கடந்த நான்கு நாள்களாக ஐந்து மதகு வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.


இந்நிலையில், வியாழக்கிழமை 12.30 மணியளவில் அணையின் நான்காவது கதவு ஏற்றி இறக்குவதற்கான இயந்திரத்தின் போரிங் பழுதான நிலையில் கதவு முழுவதும் மேல் நோக்கி உயர்ந்தது.

இதனால், அணையில் உள்ள மொத்த நீரும் அப்படியே வெளியேறி வருகிறது. தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் குமார், உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

முறையான பராமரிப்பு இல்லாததால் ஷட்டர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான மீன்கள் வெளியேறி வருகிறது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் நீர் சாத்தனூர் அணை சென்றடைந்து கடலில் கலக்கிறது.