பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 82. பக்தர்கள் மத்தியில் அவரது மறைவு என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் கோபால நாயக்கர் - மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக கடந்த 1941 ஆம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்தார். பங்கார அடிகளார் பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணி. மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து, செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றார் .அதன் பின்னர் அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். சிறு வயது முதலே ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர் வேப்ப மரத்தின் அடியில் குறி சொல்லி வந்தா. ர் இவரை அம்மா என பக்தர்கள் வணங்கி வந்தனர்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970 -ம் ஆண்டு நிறுவி கோயில் கருவறைக்கு சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறை இவர் ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடை இன்றி வழிபடலாம் என்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபட தொடங்கினர். சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்கள் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார்.


எனவே இதன் மூலம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் ,பள்ளிகள் ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இச்சூழலில் கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுயிருந்த இவர் நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதை உடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.