திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்... திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் கோவிட்-19 தடை உத்தரவு தளர்வு காரணமாக கன்னியாகுமரி பத்மநாபபுரம் பேலஸ் போன்ற சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வருகை அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தற்போது திற்பரப்பு அருவி ரம்மியமான சூழலில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. கடந்த 9 மாத காலமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் இங்குள்ள கடைகள் அனைத்தும் மூடியே கிடக்கின்றன.

இதனால் இங்கு உள்ள வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கோவிட்-19-ன் தாக்கம் குறைந்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.