பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பெங்களூருக்கு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பெங்களூருவில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. எனவே இதனால், வாகன ஓட்டிகளால் செல்ல முடியாமல் பயங்கரமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எக்கோ வேர்ல்ட் மற்றும் அவுட்டர் ரிங் ரோடு அருகிலும் அதிக அளவிலான நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முடிந்த அளவிற்கு மழை நீர் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான உயர்மட்ட ஐடி மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய உள்கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து பெங்களூரு ரூரல், சிக்கபள்ளாபூர், சிக்கமகளூர், சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், கோலார், ராம்நகர், குடகு, சாமராஜநகர், மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா மற்றும் துமகுரு போன்ற மாவட்டங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.