அமெரிக்காவில் பைடன், கமலா ஹாரிஸ் நிர்வாகப் பணிகளை தொடங்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதனால் அவர் வெள்ளை மாளிகை செல்வதற்கு இன்னும் 70 நாட்களுக்கு மேல் உள்ளன. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான உடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் செயல்திட்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் தோல்வியை ஒப்புக்கொள்ள மீண்டும் டிரம்ப் மறுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகங்களை சட்டரீதியாக எழுப்பும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். டிரம்பிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார். இதுஒருபுறமிருக்க, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை பைடன் தொடங்கி உள்ளார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் ஆட்சி மாற்றத்துக்கான இணையதளம் (BuildBackBetter.com) மற்றும் டுவிட்டர் கணக்கை தொடங்கி, நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பைடன் தொடங்கி உள்ள ஆட்சிமாற்ற இணையதளத்தில், கொரோனா, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய 4 அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.