பீகார் சட்டசபை தேர்தல் ஆலோசனை; கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... பீகார் சட்டசபை தேர்தலில் கொரோனா பாதித்தவர்களும் முதியவர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் மாதம் 29-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் பீகார் சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தேர்தலை எந்த முறையில் நடத்துவது? என்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம்.

அதனால் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அப்படி இரு மடங்காக வாக்குச் சாவடி அதிகரிக்கப்பட்டால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1,000 பேர் மட்டுமே வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவர்.

இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது என்கின்றன டெல்லி தகவல்கள். இந்த நிலையில் பீகாரில் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.