99 சதவீத விவசாயிகள் மோடி அரசுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 19 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் கூறுகையில், நாட்டில் உள்ள 99 சதவீத விவசாயிகள் மோடி அரசுக்கு ஆதரவாக உள்ளதாக கூறினார். மற்றவர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக ஏதேனும் குழப்பம் இருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து பேசி குழப்பத்தை தீர்ப்போம் என்றும் கூறினார்.


மேலும், காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் அருண் சிங் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம், கேரளா, தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் டெல்லியில் வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமரை சந்தித்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பல அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்பதில் தீவிரமாக உள்ளது.