சிபிஐயை பாஜக கட்டுப்படுத்துகிறது; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டில்லி: சிபிஐயை பாஜக கட்டுப்படுத்துகிறது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த கொள்கை மாற்றத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக 849 மதுபானக் கடைகளுக்கு புதிய மதுபான கொள்கை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் 100 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து புதிய மதுபானக் கொள்கையை டில்லி அரசு திரும்பப் பெற்றது.

இந்நிலையில், முறைகேடுகள் நடைபெற்றதா இல்லையா என்பது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், முறைகேடாக சேர்த்த 100 கோடி ரூபாயை கோவா தேர்தலில் ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்று காலை ஆஜரானார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ பாஜக வசம் உள்ளது.

பாஜக உத்தரவிட்டால் என்னை சிபிஐ கைது செய்யும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுவேன். சில தேசவிரோத சக்திகள் இந்தியா வளர்ச்சியடைவதை விரும்பவில்லை. ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.