பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

கடந்த 6 மாதங்களில் பொது போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்து விட்டது. என்றாலும், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 2019-20-ம் ஆண்டில், லாபம் ஈட்டியுள்ள அல்லது நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவார்கள். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.