கொரோனா பாதிப்பு நாடுகளில் ரஷ்யாவை பின்னு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது பிரேசில்

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது பிரேசில்.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது ரஷ்யா. தற்போது பிரேசில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 21 கோடி மக்கள் தொகை கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது.

இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 21,116 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை கொண்ட 6-வது நாடாக பிரேசில் உள்ளது என்பது வேதனையான ஒன்று.


கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,001 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் ஆயிரம் பேரை இழந்துள்ளது. தொற்று பாதிப்பில் தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது பிரேசில்.

தீவிர வலதுசாரி அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, ஆரம்பத்தில் கொரோனா வைரஸை சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை வகுத்த சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து பொறுப்பேற்ற சுகாதார அமைச்சரும் ஒரு மாதத்திற்குள் பதவி விலகினார். தேவையில்லாமல் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துக்கிறார்கள் என ஊரடங்கை அறிவித்த மாநில கவர்னர்களையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.