வரவு செலவு திட்டம்... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கிறார்

கொழும்பு: இலங்கையின் வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.

மேலும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சபையில் விசேட உரையாற்றுவார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்று வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8ம் தேதி இடம்பெறும்.

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீட்டுக்காக இன்று 14ம் தேதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நாளை 15ம் தேதி முதல் வரும் 21ம் தேதி திங்கட்கிழமை வரை இடம்பெறும்.

இதன் மீதான வாக்கெடுப்பை வரும் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை முதல் டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை இடம்பெறுவதுடன் இதன் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் மாதம் 8ம் தேதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.