குறைவான பயணிகளுடன் தமிழகத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கம்

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 60 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று பரவல் தமிழகம் முழுவதும் குறைந்துவிட்டதால் பேருந்து போக்குவரத்து மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதேபோல் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- அரசின் அறிவிப்பை தொடர்ந்து தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில் கடந்த இரண்டு நாட்கள் கூடுதலாக 20 சதவீத பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதுபோல் இரவு ஒன்பது மணிக்கு மேல் இயக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் 30 சதவீதம் குறைத்திருந்தோம். தற்போது பேருந்துகளின் சேவையை படிப்படியாக அதிகரித்து 90 சதவீத பேருந்துகளை இயக்கி வருகிறோம்.

ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவில் வருகிறார்கள். இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை வரி, சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து சில மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள்.