நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவருக்கு கார் பரிசு

தர்மபுரி: மாணவருக்கு கார் பரிசு... நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளி மாணவன் சர்வேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து மாணவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி என்னும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் உயர்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகளுக்கும், அரசு வேலைவாய்ப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.பி. சர்வேஷ் 720-க்கு 635 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் படித்த 9 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக 5 பேர் தலைசிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த மையத்தில் தேர்வு எழுதிய 90 பேரில் 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மொத்தம் 90 சதவித தேர்ச்சி பெற்று இந்த பயிற்சி மையம் சாதனை படைத்துள்ளது. இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 98.35 சதவீதமும், வேதியலில் 99.3 சதவீதமும், உயிரியலில் 99.87 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் சர்வேஷ்-க்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் ரூ.7.50 இலட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் இந்த தேர்வு வெற்றி பெற்ற நரேஷ், தனிஷ், தர்ஷனா, அமுதினி ஆகிய மாணவர்களுக்கும் அவர் பரிசு வழங்கினார்.