சாத்தான்குளம் வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி - சிபிஐ குழு சந்திப்பு

நாட்டையை உலுக்கிய சம்பவம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குதான். இதில் நீதிமன்றமே தன்னிசையாக இந்த வழக்கை எடுத்தது. இதனால் இன்று சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்த சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி - டி.எஸ்.பி அனில் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள், மதுரையில் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆத்திக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அனில் குமாரும் அவரது குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை, சிபிஐ அதிகாரிகளிடம் அனில்குமார் ஒப்படைத்தார். ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டபோது, சிபிசிஐடி பதிவு செய்த தகவல்களை ஒப்பீடு செய்து, அதில் உள்ள சந்தேகங்களை சிபிஐ அதிகாரிகள் அனில்குமாரிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்தினர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த சிபிஐ விசாரணை மாலையில் முடிவடைந்ததும், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரும் அவரது குழுவினரும் காரில் திருநெல்வேலிக்கு திரும்பினர். இந்த வழக்கு தற்போது விரைவாக நடத்தப்பட்டு வருகிறது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.