மத்திய குழுவின் வருகை டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

நிவர் புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இருந்த மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நிவர் புயல் சேதங்களைக் கணக்கிட மத்திய குழு நேற்று தமிழகம் வருவதாகவும், அவர்கள் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நிவர் புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இருந்த மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போகிறது. நேற்று வருவதாக இருந்த மத்திய குழுவினர் டிசம்பர் 5-ந்தேதி தமிழக வர உள்ளனர் என்று கூறினார்.