அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா?

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகள் திறக்க மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்து விரைவில் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாடு முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை ஏற்பாடு செய்து அதன் பின்னர் திரையரங்கம் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.