பல லட்சம் பெண்களை வீட்டின் உரிமையாளர்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்: பிரதமர் பெருமிதம்... தமது பெயரில் சொந்த வீடு இல்லை என்றாலும், தமது அரசு பல லட்சம் பெண்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பொதேலியில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் உரையாற்றிய பிரதமர், ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வழங்க அரசு பாடுபடுவதாக கூறியுள்ளார்.

மேலும், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான பெண்கள், அரசின் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பெற்றுள்ளதால் அவர்கள் லட்சாதிபதிகள் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அகமதாபாத் நகரில் உள்ள அறிவியல் நகரில் நடைபெற்ற ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கிருந்த வெவ்வெறு வகையான ரோபோக்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவகத்துக்கு சென்ற பிரதமருக்கு ரோபோ தேனீர் வழங்கியது.