புரெவி புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் 28-ம் தேதி தமிழகம் வருகை

நிவர் புயல் தமிழகத்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்திச் சென்றதைத் தொடர்ந்து, புரெவி புயல் டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவானது. புரெவி புயலால் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் பாதிப்பு தமிழகத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது. பல மாவட்டங்களில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டன. பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனவே உயிர்ச்சேதங்கள் குறைவாக இருந்தன.

நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் தமிழகத்துக்கு 5-ம் தேதி வந்தனர். இங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்து, நேரில் பார்வையிட்டு மதிப்பிட்டனர். புதுச்சேரிக்கும் சென்று அங்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்தனர்.

இந்நிலையில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகத்துக்கு வர உள்ளனர். அவர்கள் வருகிற 28-ம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவில் மத்திய உள்துறை, நிதித்துறை, சுகாதாரத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.