அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக வெப்பநிலையாக வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

மேலும், கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராமநாதபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்துள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்துள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இதனை அடுத்து இன்று மற்றும் நாளை தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.