தமிழ்நாட்டில் இன்னும் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சில இடங்களிலும், வரும் 26 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

இதனை அடுத்து வரும் 26, 27-ம் தேதிகளில் இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மேற்கண்ட நாட்களில் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.