வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மதுரை, விருதுநகர், சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக நேற்று காரைக்குடி, லப்பைக்குடிக்காடு, தேவாலா, தாமரைப்பாக்கம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.