வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

இடியுடன் கூடிய மிதமான மழை... வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.30) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் சே.பாலச்சந்திரன் கூறியதாவது:

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை (அக்.30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பலத்தமழை பெய்தது. இந்த தொடா் பலத்த மழைக்கு காரணம் என்ன குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகிழக்குப் பருவமழையுடன் மேலடுக்கு சுழற்சியும் சோ்ந்ததாலேயே பலத்த மழை பெய்துள்ளது. கடல் பரப்பில் தொலைவில் இருந்த மேலடுக்கு சுழற்சி புதன்கிழமை இரவு திடீரென சென்னைக்கு அருகில் வந்தது. சென்னைக்கு 70 மி.மீ. மழை கிடைக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அதைவிட கூடுதல் மழை கிடைத்துள்ளது என்றாா்.