சென்னையில் வடகிழக்கு பருவ மழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது

சென்னை: சென்னையில் நவம்பர் மாத வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 44 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

சென்னையில் நவம்பர் மாத வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 44 சதவீதம் குறைவாக பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4வது வாரத்தில் தொடங்கியது.


இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கள்ளக்குறிச்சியில் 56 சதவீதம், செங்கல்பட்டில் 47 சதவீதம், சிவகங்கையில் 44 சதவீதம், தஞ்சாவூரில் 40 சதவீதம், விருதுநகரில் 36 சதவீதம், திருவாரூரில் 35 சதவீதம், கிருஷ்ணகிரியில் 29 சதவீதம், மயிலாடுதுறையில் 24 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது.


22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகி உள்ளது. இதன்படி அரியலூரில் 52 சதவீதம், சென்னையில் 44 சதவீதம், தென்காசியில் 38 சதவீதம், கோவையில் 37 சதவீதம், காஞ்சிபுரத்தில் 36 சதவீதம், திண்டுக்கலில் 30 சதவீதம் என்று இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது.