முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு

முதல்வர் ஆய்வு... திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையானது காவிரி ஆற்றை இரண்டாகப் பிரித்து பாசனத்துக்கான தண்ணீரை காவிரி ஆற்றிலும், வெள்ள நீரைக் கொள்ளிடத்திலும் வெளியேற்றும் வகையில் கட்டப்பட்டது. 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அணையானது கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வெள்ளத்தில் சேதமடைந்தது.

கதவணையின் 9 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அணையை பாதுகாக்கவும், வெள்ள நீரைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் தாற்காலிக காப்பு அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி, ரூ.38.85 கோடி மதிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடைந்தன.

தற்காலிக காப்பு அணை அணையைப் பலப்படுத்திப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணை கட்டவும் அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியது. இதற்காக ரூ.387.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு வைத்தார். பைல் பவுண்டேஷன் என்ற தொழில்நுட்பத்தில் (இரும்பு குழாய்கள் பதித்து அடித்தளமிடுதல்) 484 குழாய்கள் பதித்து ஸ்திரத்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை ஏற்கெனவே இருமுறை முதல்வர் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது முறையாக முக்கொம்புக்கு இன்ற மதியம் வருகை தந்த முதல்வர், கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் பொறியாளர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழுவினரிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் கூறுகையில், புதிய கதவணை கட்டும் பணிகள் 2021 ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளனர். பணிகளைக் குறித்த காலத்துக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.