மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்துக்கும் இன்று நள்ளிரவு முதல் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.