சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

வந்தோரை வாழ வைக்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை டே வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்டு இன்று 381 ஆம் ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! என பதிவிட்டுள்ளார்.

சென்னை தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று! வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும் என பதிவிட்டுள்ளார்.