காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் - முதல்வர் தகவல்

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சிவகங்கை மாவட்டம் சென்று கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடங்களை 100 லிருந்து 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்.

தமிழக சட்டமன்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படம் வைக்கப்படும். மேலும் மோகன் குமாரமங்கலத்தின் முழு உருவப்படம் சட்டசபையில் வைக்கப்படும். 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.