கொரோனா தடுப்புப் பணிக்காக 50 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவின்போது கொரோனா தடுப்புப் பணிக்காக வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்புப் பணிக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறைக்கு 50 துரித செயல் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரியலூரில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.