ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: 107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள்.

107 பதக்கங்களை அள்ளியதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், இறகுப்பந்து நட்சத்திரங்கள் என்று இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இத்தொடரில் மின்னி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்குப் பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள்.

மேலும் இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு என் முதல்வர் அவர்கள் பதிவிட்டுள்ளார்.