குவாடர் துறைமுகத்தில் அதிஉயர் பாதுகாப்பு வளாகத்தை ரகசியமாக கட்டும் சீனா

சீனா ரகசியமாக கட்டி வரும் பாதுகாப்பு வளாகம்... பாகிஸ்தானிலுள்ள குவாடர் துறைமுகத்தில் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட வளாகமொன்றை ரகசியமாக சீனா கட்டிக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள இந்தத் துறைமுக நகரைக் கடற்படைத் தளமாகச் சீனா பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது. இதுபற்றிய தகவலை விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.

இந்தக் கடற்படைத் தளத்தின் மூலம் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ள ஃபோர்ப்ஸ் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பது செயற்கோள் புகைப்படங்களிலிருந்து தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில் ஒரு கட்டடம் துறைமுக மேம்பாட்டுக்கான சீன நிறுவனத்தின் கட்டடம் என்ற போதிலும் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த பாதுகாப்புடன் காணப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் மேற்கோரக் கடற்கரையின் முடிவில் அமைந்துள்ள குவாடர், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் - சாலை இணைப்புகளுடன் கூடிய - பெரும் துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும்.

கடல் வழியே தெற்கு ஆசியாவைச் சுற்றிக் கொண்டு வருவதற்குப் பதிலாக, சீனத்திலிருந்து சாலைவழி பாகிஸ்தானுக்குள் நுழைந்து மிக எளிதில் இங்கே வந்துவிட முடியும். குவாடரில் கடற்படைத் தளம் அமைக்க சீனா திட்டமிட்டு வருவதாக 2018 ஜனவரியில் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரையிலும் இந்தச் செய்தி யாராலும் உறுதி செய்யப்படவில்லை.