இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிப்பு

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் தீவிரமாக உள்ளது.இந்தநிலையியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலகட்டத்தில் அவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள் மூடப்பட்ட நிலையில் நாடு சிவப்பு மண்டல கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தாலியர்கள் வேலை, சுகாதாரம், அவசர காரணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து பிரதமர் கியூசெப் கோண்டே வெளியிட்ட அறிவிப்பில், இது எளிதான முடிவு அல்ல. கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று நமது நிபுணர்கள் தீவிரமாக கவலைப்பட்டனர். எனவே அதற்கேற்ப நாங்கள் செயல்பட வேண்டியது இருக்கிறது என குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் இத்தாலிதான் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு அதிகளவிலான உயிரிழப்புகளை சந்தித்து இருக்கிறது, அங்கு கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் கொரோனா வைரசுக்கு இரையாகி இருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கும், அது கொரோனாவின் முடிவின் தொடக்கத்தை குறிக்கும் என பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்தார்.