குடிமகன்களால் முடியும்... பக்தர்களால் முடியாதா? கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தல்

குடிமகன்களால் முடிவதை பக்தர்கள் எங்களால் செய்ய முடியாதா என்று அரசுக்கு பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எதற்காக என்று தெரியுங்களா.

'சமூக இடைவெளியை கடைபிடித்து ஆயிரக்கணக்கானோர் மது வாங்க கியூவில் நிற்கும் போது கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு நிற்கும் பக்தர்களால் இதை கடைபிடிக்க முடியாதா. எனவே கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு ஆறுதல்... முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும், 'ஆன்-லைன்' வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதில், 'குடி'மகன்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டு, தினமும் 500 பேருக்கு சமூக இடைவெளியுடன், மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பல இடங்களில் ஆயிரக்கணக்கானோர் மது வாங்குகின்றனர்.

இதேபோன்று நிபந்தனையுடன் கோவில்களிலும், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'குடி'மகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை, பக்தர்கள் விஷயத்திலும், அரசு காட்ட வேண்டும். 'டாஸ்மாக்' போலவே, கோவில்களிலும் காணிக்கை, நன்கொடை வாயிலாக, வருமானம் வருகிறது என்பதை, மறந்து விடக் கூடாது.

டோக்கன் முறையில், தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். .'குடி'மகன்களே சமூக இடைவெளியை கடைபிடிக்கும்போது, பக்தர்கள் நாங்களும் கடைபிடிக்க மாட்டோமா. எங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது. எனவே, கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.