கோழிக்கோடு விமான விபத்து சம்பவம்: முதல்வர், திமுக தலைவர் இரங்கல்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கோவிட்-19 நெருக்கடியால் வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.