ராமநாதபுரத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்ளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்தவகையில் இன்று ராமநாதபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.24.24 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். 15,605 பயனாளிகளுக்கு ரூ.72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் ஏரிகளில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.