ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிப்பதற்காக இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் மாதம் 14-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, தியேட்டர்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.