கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 6-ந் தேதி 2 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இதுவரை 25 மாவட்டங்களுக்கு அவர் நேரில் சென்று வந்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு, அந்த மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பது, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவது ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.

அதோடு, அந்த மாவட்டங்களில் உள்ள தொழில் முனைவோர்களுடனும், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருடனும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து பேசுகிறார்.

அதுபோல தற்போது நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 6-ந் தேதி முதல்-அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்வார்.

மேலும், 10-ந் தேதி கன்னியாகுமரி, 11-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.