கைலாசா நாட்டில் உணவகம் அமைக்க கடிதம் எழுதியவர் மீது புகார்

கைலாசா நாட்டில் உணவகம் வைக்க கேட்டு கடிதம் எழுதிய ஹோட்டல் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கைலாசா நாட்டிற்கு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ளதாகக் கூறப்படும் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள்சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.

உணவகத்திற்கு விரைவில் அங்கீகாரம் அளிப்பதாக நித்யானந்தாவும் இணைய வாயிலாக பதிலளித்திருந்தார். இந்த நிலையில் டெம்பிள் சிட்டி குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவிற்கு ஆதரவு தருவது போல் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடமும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.