கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் மாறுபட்ட சுதந்திர தின விழா!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில், முற்றிலும் மாறுபட்ட சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நாம் காணவுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சுதந்திர தின விழா உரையை இவ்வாண்டு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 20 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே நேரில் காண முடியும்.

பாதுகாப்புச் செயலர் அஜய் குமார் ஏற்பாடுகளை மேற்பார்வையிட, சென்ற வாரம் செங்கோட்டைக்கு சென்றனர். ஏற்பாடுகளை சரிபார்த்த திரு. குமார், தனிமனித இடைவெளியை கருத்தில்கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இம்முறை அனைத்து செயல்முறைகளும் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள் இம்முறை சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள். NCC மாணவர்கள் செங்கோட்டையில், விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

முன்பு இருந்தது போல, பிரதமர் தன் சுதந்திர தின உரையை அளிக்கும் பாதுகாப்பு அரணிற்குள் எந்த விவிஐபியும் அமர அனுமதி வழங்கப்படாது. முன்னர் இப்பகுதியில் மேல் தளத்தில் சுமார் 900 விவிஐபிக்கள் அமர்வது வழக்கம். ஆனால் இம்முறை சுமார் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கீழ் தளத்தில்தான் அமர வேண்டி இருக்கும்.

முக்கியமான சிறப்பம்சமாக, கொரோனா நோய்த்தொற்றுடன் போராடி வெற்றிபெற்ற சுமார் 1500 கொரோனா வெற்றியாளர்கள் இம்முறை சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வார்கள். இதில் 500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள 1000 பேர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு வரை, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பிரதமரின் உரையைக் கேட்க சுமார் 10,000 பேர் வருவது வழக்கம்.

சமீபத்தில் இது குறித்து நடந்த சந்திப்பில், இவ்வாண்டு பொது மக்களுக்கு பதிலாக கொரோனா வெற்றியாளர்கள் இந்த நிகழ்வில கலந்துகொள்வது சரியாக இருக்கும் என்றும், அவர்களுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ளும்படி உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.