பாராளுமன்ற கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று பேட்டி அளித்தபோது, எதிர்க்கட்சிகளின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க பாராளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் கூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்றத்தை சந்திக்க பயந்து, விதிகளுக்கு பின்னால் மத்திய அரசு ஒளிந்து கொள்வதாக கூறினார்.

மேலும் அவர், இந்தியா-சீனா-ரஷியா இடையிலான முத்தரப்பு மாநாடு, காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, ஜி-20 மாநாடு காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, சீனா தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடக்கும்போது, பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை ஏன் காணொலி காட்சி மூலம் நடத்த முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் கவுரவ் கோகாய், சமூக இடைவெளி உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி, பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்தலாம். ஆனால், கேள்விகளை சந்திக்க மனமின்றி, நாடாளுமன்றத்தை சந்திக்காமல் மத்திய அரசு தவிர்த்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பேட்டி அளித்தபோது, சீனா உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க பாராளுமன்ற கூட்டத்தொடரை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.