கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை

பெங்களூரு: கொரோனாவின் 3வது அலை எழுந்தபோது, காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியது. அப்போது, கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகாவில் ரூ.2,141 கோடியில் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசியை பாஜக அரசு வழங்குகிறது. நாடு முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

நமது நாடு மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. கொரோனா 2வது அலை கடுமையாக இருந்தது. அதையும் கர்நாடக அரசும், மத்திய பாஜக அரசும் சரியாக நிர்வகித்து வந்தன. கொரோனாவால் மக்கள் அவதிப்படும்போது 80 கோடி பேருக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த உணவுப் பொருட்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றுநோய்களின் போது வசதி படைத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்குப் பதிலாக துப்புரவுப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்தார். கொரோனாவின் 3வது அலை எழுந்தபோது, காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியது. அப்போது, கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை.

மாநிலத்தில் சுகாதாரத் துறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்குப் பிறகும் நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. கொரோனா விஷயத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றியது பாஜக அரசுதான். இதற்கு மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசு மாநிலத்தை வளர்ச்சியடையாமல் விட்டுவிட்டது. எனவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. இவ்வாறு அமைச்சர் சுதாகர் கூறினார்.