மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அங்குள்ள 17 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 27-ந் தேதி போராட்டம் நடத்த மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து பெங்களூரு விதான சவுதா அருகே உள்ள கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரது தலைமை ஏற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சித்தராமையா, மத்திய அரசு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசுகையில், பா.ஜனதா நமது நாட்டில் ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் அரசுகளை குறுக்கு வழியில் கவிழ்க்கிறது. ஆபரேஷன் தாமரை என்ற மிக மோசமான முறையை பா.ஜனதா கடைப்பிடிக்கிறது. குதிரை பேரம் மூலம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதாக கூறினார்.