சந்திரசேகர ராவ் ஆட்சி குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி விமர்சனம்

ஐதராபாத்: ஊழல் மலிந்த அரசு... தெலுங்கானாவில் ஊழல் மலிந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, ஐந்து மாநிலத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவரும் காங்கிரஸ், தெலுங்கானாவில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து நேற்று அங்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ஐதராபாத் மாவட்டம் நம்பள்ளியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், எனது இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, வெறுப்பு சந்தைக்கு பதிலாக அன்புக்கடையை திறப்பதாக ஒரு முழக்கத்தை முன்வைத்தேன். நான் மோடியை எதிர்த்து போராடுவதால், என் மீது பல்வேறு மாநிலங்களில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கருத்தியல் சார்ந்த எனது போராட்டத்தில் நான் சமரசம் செய்துகொள்ளமாட்டேன்.

நாட்டில் வெறுப்புணர்வை ஒழிப்பதுதான் எனது குறிக்கோள். அதற்கு, மத்தியில் ஆளும் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் முதல்படியாக தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். பாரத ராஷ்டிர சமிதி, பா.ஜனதா, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

சந்திரசேகர் ராவின் கட்சிதான் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு ஆதரவு அளித்தது. ஊழல் மலிந்த அரசை சந்திரசேகர் ராவ் நடத்துகிறார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குகள் எதுவும் இருக்கின்றனவா?. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை போன்றவை சந்திரசேகர் ராவையோ, ஓவைசியையோ கண்டுகொள்வதில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.