கொரோனாவால் வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் - சோனியாகாந்தி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் பல நடைபெறாமல் உள்ளதால் நாட்டின் பொருளாதார சூழல் தேக்கமடைந்துள்ளது.

கொரோனா காரணமாக நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியபோது, மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள், மத்திய அரசின் நிவாரணப் பணிகள், பொருளாதார நிலவரம் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

விரைவில் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் காங்கிரஸால் எழுப்பப்படும் முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் அவர், கொரோனா மற்றும் பொருளாதார பின்னடைவால் வறுமையில் வாடும் மக்களுக்குக் காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.